வெளிச்சம் தரும் விமானங்கள்
கடற்கரையில் நிற்கும் ஒருவன் கையில் முயற்சியின்றியே முத்து கிடைத்தால் எப்படி இருக்கும்? அது அதிர்ச்சியா ? ஆனந்தமா ? தெரியாமல் சில நேரங்களில் காதில் வந்து விழும் சொற்கள் பல நாள்கள் நம்மைச் சிந்திக்க வைத்துவிடுகின்றன. தேடிப்போனாலும் சிக்காத ஞான ஒளி எதிர்பாராத நொடியில் பளிச்சிடும் போது நாமும் புத்தர்களாகிறோம்.
கடந்த வாரத்தில் காதில் வந்து விழுந்த சொற்கள் இந்த வாரத்தில் என்னைக் கதைக்கச் செய்திருக்கிறது. மனிதன் யார்? மானுடன் யார்? மனித நேயம் எங்கே போயிற்று? நான் திருவிளையாடல் நாகேஷ் போலாகி கேட்கப் பதில் சொன்னவர் தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள்.
படைப்பில் எல்லோரும் மனிதர்களே. அவனுக்குக் கிடைத்த அற்ப வாழ்க்கை வாய்ப்பில் பேரிடர் வந்த போது ஆதாயம் தேடும் அற்ப மகிழ்ச்சி, அடுத்தவர் மனம் புண் பட்டால் ஆனந்தம் , என்னைத் தவிர எவருக்கும் எதுவும் கிடைக்கக் கூடாது என்ற சுயநலம் எல்லாம் இணையும் போது ஆறு அறிவு மனிதன் ஒரு அறிவு உயிருக்கும் கீழானவனாகிறான். உண்பதும் உறங்குவதும் தன்னலமாய் இயங்குவதும் மட்டும் இன்று மனிதனின் அடையாளங்களாகி விட்டது.
இயற்கை அனைவருக்கும் பொதுவாய்ப் படைத்த நீர், நிலம், காற்று, வானம், நெருப்பு எல்லாம் தனி உடைமைகளாகிவிட்டன. கிரேக்க புராணத்தில் வரும் வரம் பெற்ற மிடாஸ் தொட்டதெல்லாம் தங்கமானது. மனிதன் கண்ணில் பட்டதெல்லாம் பணம் ஆனது. ஓற்றைப் பிள்ளைகளெல்லாம் வீட்டுக் கொடுக்கும் குணம் பழக வாய்ப்பு கிடைக்காமல் சுயநலம் பழகிக் கெட்டுப் போயினர். ஒற்றைப் பிள்ளைகள் வந்ததெல்லாம் பெற்றோரின் தன்னலம் தந்த பரிசு. தன்னலம் தலை விரித்தால் பொதுநலம் போய் ஒளியும். விட்டுக் கொடுக்கத் தெரியாதவனே கெட்டுப்போகத் தெரிந்தவன் . பொதுவில் புகழ் பெற்றவர்கள் எல்லாம் ஐந்தில் ஒன்றாகவோ பத்தில் ஒன்றாகவோ பிறந்தவர்களே.
பணம் தந்த பகட்டு கண்ணை மறைக்கிறது. மானுடன் மனிதன் ஆனான். கழுத்தை தேய்ந்து கட்டெறும்பு ஆனது. தன்னைப் போல் பிறரை நேசிக்கும் மனம் கிடைத்துவிட்டால் மண்ணில் மனிதன் பிறப்பான் மனிதநேயம் மலரும்.
வெளிச்சம் வெளியிலிருந்தும் வரும். நல்ல சான்றோர் சொற்கள் என்ற விமானங்களில். நன்றி தினமணி திரு.கி.வைத்தியநாதன் அவர்களுக்கு.


