திங்கள், 19 பிப்ரவரி, 2018

கணினி சொல்லும் கதை

கணினி சொல்லும் கதை

                     இந்தக் கணினி இருக்கிறதே! மிகப் பெரிய வித்தைக்காரன். ஒரு பக்கம் காசாகக் கொட்டுவதற்கும் மறுபக்கம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கும் தெரிந்து வைத்திருக்கும் காலக்கடவுள். புராணங்களில் சொல்லப்படும் தேவனா? இல்லை அசுரனா? புரியவில்லை. சிலருக்கு எழுதுவதால் பெயர் புகழையும் சிலருக்கு அதனாலேயே இகழையும் கொண்டுவந்து சேர்க்கும் புதுமைப்பித்தன். சமயங்களில் பொருள் தெரியாத கவிதையைப் போல மருட்டும் மந்திரம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கடவுள் இந்த உலகத்தை இயக்குவது போல, கணினியும் இந்த உலகத்தை இயக்குகிறது.
                      கை பேசியில் தொடங்கி கண்ணுக்கெட்டா வானில் திரியும் கோள்களையும் தொடர்பு கொள்ளும் அரசியல்வாதி இது. அறிவின் வளர்ச்சி பெருகப் பெருக, கணினி சொல்லும் கதைகளும் விரிவடைந்துள்ளன. ஒரு சின்ன சிப் 5000 ஏக்கர் நிலத்திற்குத் தேவையான தண்ணீரை தேவைப்படும் நேரத்திற்குத் தருவது ஒரு வியப்பு என்றால் காற்றிலிருந்து குடிநீரை வரவழைப்பது பெரு வியப்பு!
                      சமுதாயம் கணினி இல்லாமல் இருப்பது இனி மிகவும் கடினம்தான். பிறப்பு தொடங்கி முடிவு வரை இதன் ஆக்டொபஸ் கரங்கள் ஆதிக்கம் செய்கின்றன. ஆமாம் மொழி மொழி என்ற ஒன்று இருந்ததே அது என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா? அதுவும் இதன் வலைக்குள் சிக்கி வசப்படும். இனி எழுத வேண்டாம். நீங்கள் எதை பேசினாலும் அதை எழுத்து வடிவத்தில் கணினிக் கடவுள் தந்து விடுவார். அது சரி நீங்கள் சரியாகப் பேச வேண்டுமே! கவலை வேண்டாம். உங்கள் பேச்சைச் சரி பார்க்க அவரால் முடியாமல் போகுமா என்ன?




                      சரிதான் பேசுவதற்கும் சரி பார்த்தத்தைத் திருத்துவதற்கும் மூளை வேண்டுமே என்கிறீர்களா? விரைவில் அதையும் அவரே படைத்துத் தருவார் . நாம் என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்களா? மூளைக்கு வேலை கொடுப்போம். கணினி செய்யும் வேலையைக் கண்காணிப்போம். அந்த ஒன்றையாவது நாம் செய்யலாமல்லவா!